ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி இதோ… “இலவச குடிநீர் கேன் வழங்கும் திட்டம்- ஏடிஜிபி வனிதா தொடங்கி வைத்தார்…!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை ஏடிஜிபி வனிதா தொடங்கி வைத்தார்.

சென்னை ரயில்வே போலீஸ் சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கான சந்திப்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடந்தது. ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா தலைமை தாங்கி பேசினார். அதில் ஏடிஜிபி வனிதா தெரிவித்ததாவது” கடந்த ஆறு மாதத்தில் மட்டும் ரயில்வே போலீசாரால் 780 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் சென்னை மற்றும் திருச்சி ரயில் நிலையங்களில் காணாமல் போன ஐந்து லட்சத்து 97 ஆயிரத்து 420 மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சென்னை மற்றும் திருச்சி மாவட்ட ரெயில் நிலையங்களில் திருட்டு போன பணம் ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்து 880 மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக 75 சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை ரயில் நிலையத்தில் பயணிகள் பயன்பெறும் வகையில் இலவச குடிநீர் கேன் வழங்கும் திட்டத்தை ஏடிஜிபி வனிதா தொடங்கி வைத்தார்.