நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு 50% உயர்வு..?

சென்னை : நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, 50 சதவீதம் வரை உயர்த்த பதிவுத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வழிகாட்டி மதிப்புக்கான மாநில மையக் குழு வாயிலாக மட்டுமே, வழிகாட்டி மதிப்பு உயர்வு குறித்த நடைமுறைகளை வகுக்க முடியும்.பதிவுத் துறை தலைவர் சிவன் அருள் தலைமையில், இதற்கான கூட்டம் ‘ஆன்லைன்’ முறையில் நேற்று நடந்தது.
அதில், வழிகாட்டி மதிப்பு நடைமுறைகள் விவாதிக்கப்பட்டன.தமிழகத்தில் நிலத்தின் சந்தை மதிப்பு, 2017 ஜூன் 9க்கு பின் வெகுவாக உயர்ந்துள்ளது. எனவே, 2012 ஏப்., 1 முதல் 2017 ஜூன் 8 வரை அமலில் இருந்த மதிப்புகளை, அப்படியே இன்றைய சூழலுக்கு பயன்படுத்த முடியாது. எனவே, நிர்வாக ரீதியாக இதில் சில முடிவுகள் எடுக்க வேண்டியது அவசியம். அதன்படி, 2017 ஜூன் 8 நிலவரப்படியான மதிப்புகளை அமல்படுத்தும் போது, பரவலாக அனைத்து மதிப்புகளும், 50 சதவீத உயர்வு இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த 2012ல் விவசாய நிலமாக இருந்த பகுதிகள், தற்போது வீட்டு மனையாக மாறியுள்ள நிலையில், அதற்கான புதிய உயர் மதிப்புகளை கடைபிடிக்கலாம் என்றும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணை, விரைவில் வெளியிடப்படும் இவ்வாறு அவர் கூறினார்.