கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் மகாராஷ்டிரா தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்து நீக்கம் : உத்தவ் தாக்கரே அதிரடி நடவடிக்கை .!!

மும்பை: கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனாவில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே 39 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால், உத்தவ் பெரும்பான்மை பலத்தை இழந்ததால், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, பாஜ.வுடன் கூட்டணி சேர்ந்து, மகாராஷ்டிரா மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிசும் நேற்று முன்தினம் பதவியேற்றனர். இந்நிலையில், புதிய முதல்வர் ஷிண்டே தலைமையிலான அரசு மீது சட்டப்பேரவையில் நாளை மறுதினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக நாளை, நாளை மறுதினம் 2 நாள் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடக்க உள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக நேற்று பேட்டி அளித்த ஷிண்டே, தனக்கு 170 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவை அனைத்து கட்சிப் பதவிகளில் இருந்தும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அதிரடியாக நீக்கியுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ஷிண்டே நீக்கப்பட்டுள்ளதாக சிவசேனா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷிண்டே கட்சி உறுப்பினர் பதவியையும் கைவிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.