சென்னை, செங்கல்பட்டில் கொட்டி தீர்த்த கனமழையால் மின்சாரம் துண்டிப்பு : மக்கள் வெளியே வராதீர்கள்- மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை..!

சென்னை: சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் சில இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் மின் கம்பம் சாய்ந்தது, மரங்கள் விழுந்தது போன்ற காரணங்களாலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மக்கள் வெளியில் வர வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பெஞ்சல் புயல் காரணமாக சென்னை முழுக்க நேற்று இரவு தொடங்கி தற்போது வரை பலத்த மழை பெய்து வருகிறது. புயல் கரையை கடக்க தாமதம் ஆகும் என்பதால் , இன்று இரவு வரை மழை பெய்யும் என தெரிகிறது.. தற்போது பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், துரைப்பாக்கம், பெருங்குடி, கிண்டி, பல்லாவரம், தாம்பரம், கோயம்பேடு, வடபழனி, போரூர், பூந்தமல்லி, திருவள்ளூர்,ரெட் ஹில்ஸ், பொன்னேரி, மணலி, திருவெற்றியூர், தண்டையார்பேட்டை, வில்லிவாக்கம், கொரட்டூர், அம்பத்தூர், பாடி, அயனாவரம், அண்ணா நகர், அசோக் நகர், கேகே நகர், குரோம்பேட்டை, குன்றத்தூர், நாவலூர், சோழிங்கநல்லூர் என எல்லா பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டது. அதேநேரம் ஐடி நிறுவன ஊழியர்கள் வீடுகளில் வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார். மற்றவர்கள் அலுவலகம் செல்ல வேண்டும் என்கிற நிலையில், அலுவலகம் செல்லவே முடியாத அளவிற்கு மழை கொட்டி வருகிறது.

சாலைகளே தெரியாத அளவிற்கு தண்ணீர் பல்வேறு சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் சென்னையில் பெரியஅளவில் எங்கும் பாதிப்பு இல்லை. சுரங்கப்பாதைகளில் இன்று காலை நிலவரப்படி எங்குமே தண்ணீர் தேங்காமல் தான் இருந்தது. ஆனால் இனி மேல் பெய்யும் மழைக்கு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

சென்னை புறநகர்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில், கழிவு நீர் நிரம்பி வழிகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தின் பல ஊர்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாமல்லபுரம் திருக்கழுக்குன்றம் கல்பாக்கம் சதுரங்கப்பட்டினம் கூவத்தூர் நெமிலி ஆழிக்குப்பம் ஆகிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் பல்வேறு இடங்களில் மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மின்சாரம் வந்து வந்து போவதாக சொல்கிறார்கள்.

சென்னையில் புயல் முன்னெச்சரிக்கை பணிகளில் சுமார் 22000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் 329நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன என்றும், 103 படகுகள் தேவையான இடங்களில் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் கூறினார். 1686 மோட்டார்கள்,, 466 டிராக்டர்கள் பொருத்தப்பட்ட மோட்டார்கள் தயாராக உள்ளன என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்தார்.