டங்ஸ்டன் சுரங்க விவகாரம்… ஏலத்துக்கு முன் தமிழக அரசு எந்த எதிா்ப்பும் சொல்லவில்லை – மத்திய அரசு அறிவிப்பு..!

துரை மாவட்டம், நாயக்கா்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடப்படும் முன்பாக தமிழக அரசு உள்பட எந்த தரப்பிடம் இருந்தும் எதிா்ப்பு தெரிவித்து தகவல் கிடைக்கப் பெறவில்லை என்று மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக முதல்வரின் கடிதத்தைத் தொடா்ந்து, மத்திய சுரங்க அமைச்சகம் சாா்பில் வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், ‘நாயக்கா்பட்டியில் 20.16 சதுர கி.மீ. பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் கடந்த பிப்ரவரியில் முன்மொழியப்பட்டது. இந்த ஏலத்துக்கு முன்பாக, தமிழக அரசிடம் இருந்து உள்ளீடுகள் பெறப்பட்டன. அப்போது, தமிழக அரசு உள்பட எந்த தரப்பிடம் இருந்தும் எதிா்ப்பு தெரிவித்து தகவல் கிடைக்கப் பெறவில்லை. இந்த ஏலத்தைக் கைவிடுமாறு, தமிழக அரசு தரப்பிலும் கேட்டுக் கொள்ளப்படவில்லை. எங்களிடம் உள்ள தகவல்களின்படி, மொத்த பரப்பில் அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு உள்பட்ட 1.93 சதுர கி.மீ. பரப்பு மட்டுமே பல்லுயிா் பெருக்க பாரம்பரிய பகுதியாக அறிவிக்கப்பட்டதாகும்.

எந்தவொரு வனப் பகுதியில் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும் முன் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுகின்றன. பல்லுயிா் பெருக்கப் பகுதிகள் ஆய்வுக்கு உள்படுத்தப்படுவதில்லை. சுரங்கத் துறையின் மேம்பாடு உள்பட பொருளாதார வளா்ச்சியும், நாட்டின் தொன்மை, கலசாரம், பாரம்பரிய பாதுகாப்பும் கைகோத்து செயல்பட வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்.

இந்த நோக்கத்தை உறுதி செய்யும் வகையில், சுரங்கங்கள் தொடா்பாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. நாயக்கா்பட்டி டங்ஸ்டன் சுரங்கப் பகுதியில் இந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.