கஞ்சா போதையில் தலைமை ஆசிரியரின் மண்டை உடைப்பு.. சீரழியும் மாணவர் சமுதாயம்.. அன்புமணி கொந்தளிப்பு.!

விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா போதையில் மாணவிகளை தகாத வார்த்தைகளில் பேசியதை கண்டித்த தலைமை ஆசிரியரை மாணவர் கூர்மையான பொருளால் தாக்கி மண்டையை உடைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கஞ்சா போதையில் மாணவிகளை தகாத வார்த்தைகளில் பேசியதை கண்டித்த தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரகுமாரை, விக்னேஷ் என்ற மாணவர் கூர்மையான பொருளால் தாக்கி மண்டையை உடைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்த கொடுமை நிகழ்ந்த பள்ளி வள்ளலார் பெயரில் அமைந்துள்ளது. அப்பள்ளியில் 11 மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகியுள்ளனர். அவர்களுக்கு போதையிலிருந்து மீள்வதற்கான சிகிச்சைகளுக்கும் தலைமை ஆசிரியர் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால், அவரே தாக்கப்பட்டுள்ளார்.

போதை மீட்பு சிகிச்சை பெற்றும் மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாவதற்கு காரணம் புதுச்சேரி அரியூரிலும், அருகிலுள்ள பகுதிகளிலும் கஞ்சா தடையில்லாமல் விற்பனை செய்யப்படுவது தான். புதுவை-தமிழக எல்லையில் கஞ்சா விற்பனையை தடுக்க இரு மாநில காவல்துறைகளும் தவறி விட்டன.

தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டாக போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், பள்ளி மாணவர்களுக்கே தடையில்லாமல் கஞ்சா கிடைக்கிறது என்பதிலிருந்தே போதை ஒழிப்பு நடவடிக்கைகள் பெயரளவுக்கு மட்டுமே நடக்கின்றன என்பது உறுதியாகிறது.

தமிழ்நாடு முழுவதும் கஞ்சா – போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை இன்னும் பல மடங்கு தீவிரப்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு போதையின் தீமை குறித்து எச்சரிப்பதுடன், அவர்களின் செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.