ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்த கூறி லிங்க் அனுப்பி பெண்ணிடம் ரூ. 4 லட்சம் நூதன மோசடி..!

கோவைசாயிபாபா காலனி அழகேசன் ரோட்டை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி கிருஷ்ணவேணி ( வயது 52) இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த 22ஆம் தேதி எனது மாமியாரின் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் ( குறுஞ்செய்தி) வந்தது அதில் மின்கட்டணத்தை உடனடியாக செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறியிருந்தது. இதை பார்த்த எனது மாமியார் அந்த எஸ்.எம் எஸ்.ஐ எனக்கு அனுப்பினார். உடனே நான் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது எதிர்முனையில் பேசியவர் மின் கட்டடணத்தை உடனடியாக ஆன்லைன் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறினார் .மேலும் மின் கட்டணம் செலுத்துவதற்கான “லிங்க்” ஒன்றையும் எனது செல்போனுக்கு அனுப்பினார். இதை உண்மை என நம்பிய நான் அந்த லிங்குக்குள் சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு விவரங்களை அனைத்தையும் பதிவு செய்தேன் . மேலும் அடுத்த பக்கத்தில் மின் இணைப்பு துண்டிக்காமல் இருக்க உடனடியாக ரூ. 10அனுப்பும்படி கூறப்பட்டிருந்தது. இதை யடுத்து நான் ஆன்லைன் மூலம் ரூ 10அனுப்பி வைத்தேன். அதன் பின்னர் சிறிது நேரத்தில் எனது வங்கி கணக்கில் இருந்து ரூ 4. லட்சத்து 24 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. நான் மின்கட்டணம் செலுத்த கூறியவரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டேன். ஆனால் அந்த எண்” சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளது. எனவே எனது வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட ரூ 4 லட்சத்து 25 ஆயிரத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .சைபர் கிரைம் போலீஸ்இன்ஸ்பெக்டர் தண்டபாணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதில் கிருஷ்ணவேணியின் நிரந்தர வைப்புத்தொகை கணக்கை’ குளோஸ்” செய்து ரூ. 2 லட்சத்து 90 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.