மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… இனி சனிக்கிழமைகளில் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தில் வரும் 2022 – 2023ஆம் கல்வி ஆண்டில் அனைத்துப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

வரும் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மற்றும் பொதுத் தேர்வு தொடங்கும் தேதி குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2022 – 2023ஆம் கல்வி ஆண்டில் அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 1 முதல் 10 ஆம் வரையிலான மாணவ, மாணவியருக்கு வரும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அதேபோல, பிளஸ்2 மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், பிளஸ்1 மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதி திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு பொதுத் தேர்வு தொடங்கும் தேதியையும் அறிவித்தார்.

அதன்படி, தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2023 மார்ச் 13ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 2023ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி தொடங்கும் என்றும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 ஏப்ரல் 3ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், வரும் கல்வி ஆண்டில் இருந்து கரோனா கால அட்டவணை போல அல்லாமல் வழக்கம்போல பள்ளிகள் செயல்படத் தொடங்கும் என்ற அறிவிப்பையும் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.