பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி… மீண்டும் தொடங்கியது மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் இயக்கம்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு நீலகிரிக்கு இந்த ரெயில் புறப்படும். இந்த ரெயிலில் மேட்டுப்பாளையம், குன்னூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயணம் செய்வார்கள். அடர்ந்த வனப்பகுதி வழியாக இந்த ரெயில் செல்வதால் ரம்மியமான இயற்கை காட்சிகளுடன் வனப்பகுதியில் நடமாடும் வனவிலங்குகளை கண்டு ரசித்தபடி செல்லலாம் என்பதால் இந்த ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த 14-ந் தேதி நள்ளிரவு நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கல்லாறு-ஹில்குரோவ்-அடர்லி இடையே மலை ரெயில் பாதையில் 10-க்கு மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் தண்டவாளத்தில் ராட்சத பாறைகள் மற்றும் மரங்களும் வேரோடு விழுந்தன. இதையடுத்து தென்னக ரெயில்வே நிர்வாகம் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயிலை 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 5 நாட்களுக்கு ரத்து செய்தது. தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் விழுந்த ராட்சத பாறைகள், மண்சரிவு மற்றும் மரங்களை அகற்றி சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்றுடன் சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிந்தது. இதையடுத்து 5 நாட்களுக்கு பிறகு இன்று காலை முதல் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து தொடங்கியது. காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டது. இதில் 180 பயணிகள் பயணித்தனர். 5 நாட்களுக்கு பிறகு மலைரெயில் சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.