வேலை கிடைக்காத விரக்தி… டிரைவர் உயிருடன் எரித்துக் கொன்ற கோவை வாலிபர் கைது..!

கோவை வீரையம்பாளையம் அருகே உள்ள காந்தி வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 47). லோடு வேன் டிரைவர். சம்பவத்தன்று இவர் நேரு நகர் காளப்பட்டி ரோட்டில் கட்டிட மேஸ்திரி மணிகண்டன் என்பவருடன் லோடு வேனில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்து இருந்த பெட்ரோலை ரவியின் மீது ஊற்றி தீப்பற்ற வைத்தார். கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை பார்த்த அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
ரவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் ரவி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் ரவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம் எஸ். ராமச்சந்திராபுரம் அருகே உள்ள திருவள்ளுவர் காலனியை சேர்ந்த பூமாலைராஜா (23) என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது பூமாலை ராஜா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- நான் பி.எஸ்.சி. பட்டப்படிப்பு படித்து முடிந்துள்ளேன். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வேலை தேடி கோவைக்கு வந்தேன். பின்னர் நேரு நகரில் தங்கி இருந்து வேலை தேடினேன். ஆனால் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனையடுத்து நான் வயிற்று பசியை போக்க கிடைத்த கூலி வேலைக்கு சென்று வந்தேன். எனக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டேன். சம்பவத்தன்று எனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் இல்லாமல் போனது. இதனையடுத்து நான் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் வாங்குவதற்காக சென்றேன். பின்னர் பெட்ரோலை வாங்கி கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றேன். செல்லும் வழியில் ரவி அவரது நண்பருடன் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தார். அப்போது நான் வைத்து இருந்த பெட்ரோலை அவரது உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தேன். அவர் உடல் கருகி இறந்து விட்டார். ஆனால் அவரை எனக்கு யார் என்றே தெரியாது. எனக்கு ஏற்பட்ட வேலை கிடைக்காத விரக்தியில் இப்படி செய்து விட்டேன்.போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறினார். போலீசார் கைது செய்யப்பட்ட பூமாலை ராஜாவை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.