பிப்ரவரி 26 முதல் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்..!

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளது.

தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு வலியுறுத்தி வருகிறது.

ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் கடந்த ஜனவரி மாதம் மாநில அளவில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதன் பின்னரும் தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் உள்ள நிலையில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

முன்னதாக பிப்ரவரி 15ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும், அதன்பின்னரும் அரசு செவிசாய்க்காவிட்டால் பிப்ரவரி 26 முதல் காலவரையற்ற முழு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டால் பல அரசு பணிகளும், மக்கள் சேவைகளும் பாதிக்கும் நிலைமை உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த போராட்டம் மாநில அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.