மதியம் 2 முதல் இரவு 8 மணி வரை… மது விற்பனை நேரத்தை குறைக்க அரசு பரிசீலிக்க வேண்டும்- உயர் நீதிமன்றம் உத்தரவு..!

துரை: பொது நலன்கருதி டாஸ்மாக் மது விற்பனை வணிக நேரத்தை மதியம் 2:00 முதல் இரவு 8:00 மணி வரை குறைப்பது பற்றி மாநில அரசு பரிசீலிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருச்செந்துார் ராம்குமார் ஆதித்தன் 2019 ல் தாக்கல் செய்த பொதுநல மனு: டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. மதுவிற்கு அடிமையாகும் ஏழைகளின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கின்றன. மதுவால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. தற்போது டாஸ்மாக் கடைகள் மதியம் 12:00 முதல் இரவு 10:00 மணிவரை செயல்படுகின்றன. 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சட்டப்படி மது விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.மதுவின் தீமைகள் குறித்து டாஸ்மாக் கடைகள், பார்கள் முன் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

விலைப்பட்டியல் தமிழில் வைக்க வேண்டும். புகார் செய்ய வசதி செய்ய வேண்டும். மதுவின் பெயர், அவற்றில் கலந்துள்ள பொருட்கள், தயாரிப்பாளர் விபரங்கள் மது பாட்டிலில் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகள், பார்கள் மதியம் 2:00 மணியிலிருந்து இரவு 8:00 மணிவரை மட்டும் செயல்பட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.மதுரை ரமேஷ்,’21 வயது பூர்த்தியானவர்கள் மட்டுமே மது அருந்தும் வகையில் உரிமம் வழங்கும் நடைமுறையை கொண்டுவர அரசுக்கு உத்தரவிட வேண்டும்,’ என மனு செய்தார்.நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு: மது அருந்துதல் சமூக தீமை என இந்நீதிமன்றம் கருதுகிறது. இது சமூக கட்டமைப்பின் சிதைவிற்கு வழிவகுக்கிறது. உடல், மனநலப் பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்கிறது. வாகன விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

இளைய தலைமுறையினர் அடிக்கடி மது அருந்துகின்றனர். மது அருந்துவதை குறைக்க விதிகளை உருவாக்கி, நடைமுறைப் படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுப்பது இன்றியமையாதது. மதுவின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மது அருந்துதல் மற்றும் வினியோகத்தின் மீது கடும் சட்டம், கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

இளைய தலைமுறையினர் மது பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். பொது சுகாதாரம் மற்றும் பொது நலனை பாதுகாக்க மது அருந்துதலை குறைக்க பயனுள்ள நடவடிக்கை எடுப்பது அவசியம். அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றாலும், பொது நலனை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்படுகிறது.* இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை மற்றும் கொள்முதல் செய்ய, பயன்படுத்த உரிமம் வழங்கும் முறையை அமல்படுத்த தமிழக அரசு, டி.ஜி.பி.,க்கு அறிவுறுத்தல் வழங்க மத்திய அரசு பரிசீலிக்கலாம்.* மது அருந்த உரிமம் வைத்துள்ள நுகர்வோர் மட்டுமே மதுபானங்களை வாங்க அனுமதிக்க முடியும் என டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளுக்கு அறிவுறுத்தல்களை தமிழக அரசு வழங்க வேண்டும்.* உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிமுறைகள்படி லேபிள் இடம் பெற வேண்டும்.* லேபிள்களை அச்சிடுதல், விலைப் பட்டியல் மற்றும் தமிழில் புகார்களை பதிவு செய்வதற்கான விபரங்களை அறிவிப்பு செய்ய மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்.* டாஸ்மாக் பணியாளர்கள் நிர்வாக விதிகளை முறையாக கடைப்பிடிப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.* 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கப்படுவதில்லை என்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.* பொது நலன் கருதி டாஸ்மாக் வணிக நேரத்தை மதியம் 2:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை குறைப்பது பற்றி மாநில அரசு பரிசீலிக்கலாம். இவ்வாறு உத்தரவிட்டனர்.