நண்பர்களே… என்னை வாழ்த்தி அனுப்புங்கள்… தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட கே.எஸ். ராதாகிருஷ்ணன் முகநூலில் பதிவு.!

திமுக செய்தித் தொடர்பாளராக இருந்து வந்தவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், `தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் தி.மு.க-வின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் கே.எஸ் ராதாகிருஷ்ணன் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்’ என அறிவித்துள்ளார்.

இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில், தாகூரின் கீதாஞ்சலியில் உள்ள வரிகளை மேற்கோள் காட்டி, என்னை வாழ்த்தி அனுப்புங்கள் என்று பதிவு செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல் அண்மையில் நடந்தது. இதில் மல்லிகார்ஜூன கார்கே பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வென்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனார். இந்தத் தேர்தல் முடிவு குறித்து, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தன் ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்திருந்தார்

அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தோற்றத்தில் கார்கே படம் இடம்பெற்றிருந்தது. மேலும், மன்மோகன் சிங் 2.0 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாழ்த்துகள் எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர் இந்த பதிவை தனது டிவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கி விட்டார்.

இருப்பினும் தொடர்ந்து ராதாகிருஷ்ணன், சமூக வலைத்தளங்களில் கட்சி தலைமைக்கு எதிராக கருத்து பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.