ஒரே பத்திரத்தை வைத்து 2 வங்கிகளில் கடன் வாங்கி மோசடி தனியார் நிறுவன ஊழியர் கைது

ஒரே பத்திரத்தை வைத்து 2 வங்கிகளில் கடன் வாங்கி மோசடி தனியார் நிறுவன ஊழியர் கைது

கோவை போத்தனூர் ஸ்ரீனிவாசநகரை சேர்ந்தவர் முத்து இருளப்பன் ( 30). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் வீடு கட்டுவதற்காக தனது வீட்டு பத்திரம் மூலம் சாய்பாபா காலனியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.29 லட்சம் கடன் வாங்கினார். ஆனால் அதற்கான வீட்டு பத்திரத்தை அவர் வங்கியில் கொடுக்கவில்லை. 15 நாட்களுக்குள் பத்திரத்தை கொடுப்பதாக கூறிவிட்டு பல நாட்களாக அவர் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார். ஆனால் வங்கி மூலம் பலமுறை அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதும் முத்து இருளப்பன் வீட்டு பத்திரத்தை கொடுக்கவில்லை. இதற்கிடையே வங்கி அதிகாரிகள் அவரின் வீட்டுக்கு சென்று பார்த்த போதும் முத்து இருளப்பனை சந்திக்க முடிய வில்லை.இதையடுத்து வங்கி அதிகாரிகள், முத்து இருளப்பன் கொடுத்த வீட்டு பத்திரத்தின் நகலை வைத்து ஆய்வு செய்த போது, அவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடன் வாங்கி விட்டு பத்திரத்தை கொடுக்காமல், அதே பத்திரத்தை வைத்துக் கொண்டு கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.15 லட்சம் கடன் வாங்கியதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளர் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன், வங்கியில் கடன் வாங்கி விட்டு பத்திரத்தை கொடுக்காமல் மற்றொரு வங்கியில் அதே பத்திரத்தை வைத்து கடன் வாங்கி மோசடி செய்த முத்து இருளப்பனை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.