கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ : 14,000 ஏக்கர் சேதம் – 6,000 பேர் வெளியேற்றம்..!

நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக அப்பகுதியிலிருந்து சுமார் 6,000 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே 14,000 ஏக்கருக்கும் அதிகமான அளவில் தீ பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது மீண்டும் பல இடங்களில் பரவ தொடங்கியுள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் பணியில் 2,000 தீயணைப்பு வீரர்கள் 17 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசிய பூங்காவையொட்டியுள்ள ஓக் மரக் காடுகளில் இந்த தீ பரவியுள்ளது. ஏற்கெனவே அதிக வெப்பநிலை அப்பகுதியை வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது காட்டுத்தீயும் மக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் அங்கிருந்து சுமார் 6,000 பேர் வேறு பகுதிக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் என கலிபோர்னியா வனச்சரக மற்றும் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

தீ பரவத்தொடங்கியதிலிருந்து எதிர்ப்படும் அனைத்தையும் அது சாம்பலாக்கியுள்ளது. இப்பகுதியில் நிலவும் கடுமையான வறட்சி இந்த காட்டுத்தீ தீவிரமாக பரவுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக கலிபோர்னியா வனச்சரக மற்றும் தீயணைப்புத்துறை கூறியுள்ளது. இதனால் இதன் பாதையில் உள்ள குடியிருப்புகளை தாங்கள் உடனடியாக அப்புறப்படுத்தி வருவதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட விளைவு என அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் அல் கோர் எச்சரித்துள்ளார். அதேபோல அதிபர் ஜோ பைடன் உடனடியாக காலநிலை அவசரநிலையை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இயற்கை ஏற்கனவே உலகளாவிய அவசரநிலையை அறிவித்துவிட்டது என்று சமீபத்தில் தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியிலும் கோர் குறிப்பிட்டிருந்தார்.

பொதுவாக காலநிலை மாற்றத்தை அமெரிக்க அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளாது. இது ஒரு மாயத்தோற்றம் என்று அமெரிக்காவின் முன்னாள் அரசியல்வாதிகள் பொதுவெளியில் வெளிப்படையாகவே பேசியிருந்தனர். இந்நிலையில் குளிர் பிரதேசமான ஐரோப்பாவில் தற்போது நிலவி வரும் வெப்ப அலை நிகழ்வை சுட்டிக்காட்டிய கோர், காலநிலை மாற்றம் குறித்தும் அவசர நிலை குறித்தும் எச்சரித்துள்ளார்.

ஐரோப்பா மட்டுமல்லாது அமெரிக்காவின் வடக்கு பகுதியில் வெப்பநிலை தொடர்ந்து உயரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உரை பனி இருக்கும் இந்த பகுதியில் நடப்பாண்டில் அதிகபட்சமாக சுமார் 105-110 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவையனைத்தும் உலக வெப்பமயமாதலின் விளைவு என ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.