கோவையில் 131 ஆதரவற்றவர்களுக்கு மொட்டை அடித்து சித்திரவதை: காப்பகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் – போலீஸ் விசாரணை..!

கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே 100 க்கு மேற்பட்ட ஆதரவற்றவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அறையில் அடைத்து சித்திரவதை செய்வதாக தன்னார்வ தொண்டு அமைப்பு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொண்டாமுத்தூரை அடுத்த கெம்பனுர் அட்டுக்கல் என்ற இடத்தில் இயங்கி வந்த காப்பகம் பல்வேறு காரணங்களால் ஏற்கனவே வருவாய்துறையினரால் சீல் வைக்கப்பட்ட காப்பகமாகும்.

இரண்டு மாதங்களாக சாலை ஓரங்களில் சுற்றி திரிந்தவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்களை காப்பக ஊழியர்கள் வாகனங்களில் கடத்தி கொண்டு வந்து சிறிய அறையில் அடைத்து வைத்தாக புகார்கள் எழுந்தது. உள்ளூர் மக்கள் அங்கு சென்று பார்த்தபோது சிறிய அறையில் 131 பேர் அடைக்கப்பட்டிருந்தது கண்டு காப்பக ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அங்கு இருந்து காப்பக வாகனத்தை புரட்டி போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற தொண்டாமுத்தூர் காவல் நிலைய போலீசார் அங்கு அடைத்து வைத்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. சாலையில் படுத்து தூங்கிய பணியாளர்கள், பேருந்துக்காக காத்திருந்த முதியவர்கள் உள்ளிட்டோரை வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றி வந்து இந்த அறையில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து பொது மக்கள் அங்கு கூடியதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அடைக்கப்பட்டவர்களை சிலரை காப்பக ஊழியர்கள் மொட்டை அடித்து அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. நிகழ்விடத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், காவல்துறை எஸ்.பி பத்ரி நாராயணன் , வட்டாச்சியர் காந்திமதி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை நடத்தினர். 131 பேரை விடுவித்த அதிகாரிகள் அவர்களில் மனநலம் குன்றியவர்களை வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த பிரச்னை தொடர்பாக காப்பக ஊழியர்களிடம் போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.