ராம்நாத் கோவிந்திற்கும் ,திரௌபதி முர்முவுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து கடிதம்..!!

குடியரசுத்தலைவராக இருந்து பணி நிறைவு பெற்ற ராம்நாத் கோவிந்துக்கும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக கடந்த 2017-ஆம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். இதையடுத்து, அவரது பதவி காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, நடைபெற்ற குடியரசுத்தலைவர் தேர்தலில் 15-வது குடியரசுத்தலைவராக பாஜக கூட்டணியின் திரௌபதி முர்மு வெற்றி பெற்றார்.

தனது பதவி காலம் நிறைவடைந்ததால் ராம்நாத் கோவிந்துக்கு நேற்று டெல்லியில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ராம்நாத் கோவிந்துக்கு பிரியா விடை கொடுத்தனர். இந்நிலையில், வெற்றிகரமாக தனது பணியினை நிறைவு செய்துள்ளதாக ராம்நாத் கோவிந்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், அன்பார்ந்த ராம் நாத் கோவிந்த் அவர்களே, இந்திய குடியரசுத் தலைவராக உங்கள் பதவி காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்ட் 2021-இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் எனது அழைப்பை ஏற்று தாங்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததை இத்தருணத்தில் நினைவு கூறுகிறேன். நாட்டின் குடியரசுத் தலைவராக எங்கள் மாநிலத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு தங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

தங்களின் வளமான அனுபவத்தால் நாடு தொடர்ந்து பயன் பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நல்ல உடல் நலத்துடன் அமைதியான வாழ்வு அமைந்திட வாழ்த்துகிறேன் என மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு எழுதிய வாழ்த்து கடிதத்தில், இந்தியக் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது ஜனநாயக கொள்கையின் மீது நாட்டின் நம்பிக்கையும், பலத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்திய குடியரசுத் தலைவராக உங்கள் சேவைகளால் நாடு பயனடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.