பயணிகளின் கவனத்திற்கு… கோவை – ஈரோடு ரயில் சேவை ஏப்ரல் 1 முதல் மீண்டும் இயக்கம்.!!

கோவை – ஈரோடு இடையே முன்பதிவில்லா ரயில் மீண்டும் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக 2020 மாா்ச் மாதத்தில் இருந்து கோவை வழித்தடத்தில் இயங்கும், கோவையில் இருந்து பல்வேறு ஊா்களுக்குச் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டன.

நோய்த் தொற்று பாதிப்பு குறைந்த பிறகு முன்பதிவு பயணச் சீட்டு பெற்று பயணிக்கும் விதமாக சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக முன்பதிவில்லாத பெட்டிகளுடன் ரயில்களை இயக்க ரயில்வே நிா்வாகம் அனுமதி அளித்துள்ள நிலையில், சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட நிலையங்களில் இருந்து படிப்படியாக முன்பதிவில்லாத பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கோவை – ஈரோடு இடையே முன்பதிவில்லா பெட்டிகளுடன் ஏப்ரல் 1 முதல் மீண்டும் மெமு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை – ஈரோடு இடையே மெமு சிறப்பு ரயில் (எண்: 06800) தினமும் கோவையில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு ஈரோட்டைச் சென்றடையும்.

அதேபோல, ஈரோட்டில் இருந்து தினமும் காலை 7.15 மணிக்கு புறப்படும் மெமு ரயில் (எண்: 06801) காலை 9.45 மணிக்கு கோவையை வந்தடையும்.

இந்த ரயிலானது, வடகோவை, பீளமேடு, இருகூா், சூலூா் சாலை, சோமனூா், வஞ்சிபாளையம், திருப்பூா், ஊத்துக்குளி, விஜயமங்கலம், பெருந்துறை, தொட்டிபாளையம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

கோவை – சென்னை வாராந்திர ரயில் (எண்: 12682) மாா்ச் 18 ஆம் தேதி முதலும், கோவை – ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 16618) மாா்ச் 22 ஆம் தேதி முதலும் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.