விமான சேவை இல்லாத நாடுகளுக்கும் கோவையில் இருந்து ‘பாண்டட் டிரக்’ சேவை மூலம் 50% சரக்குகள் ஏற்றுமதி..!

கோவை விமான நிலைய வளாகத்தில் ஒருங்கிணைந்த சரக்கக அலுவலகம் அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தற்போது சிங்கப்பூர், ஷார்ஜா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே விமானங்கள்
இயக்கப்படுகின்றன. இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த சேவை தற்காலிகமாக ரத்து
செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் கோவையில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள்
உலக நாடுகளுக்கு தங்களது பொருட்களை ஏற்றுமதி செய்ய ‘பாண்டட் டிரக்’ சேவை
உதவுகிறது. கடந்த 2003-ம் ஆண்டு முதல் கோவை விமான நிலையத்தில் இந்த சேவை
வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகள் கூறியதாவது:-
பாண்டட் டிரக் சேவை என்றால், கோவையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு
புக்கிங் செய்யப்படும் பொருட்கள் சாலை வழியாக கொச்சி, சென்னை, பெங்களூரு,
மும்பை உள்ளிட்ட நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்படும்.
கோவை விமான நிலையத்தில் தற்போது மாதந்தோறும் சராசரியாக உள்நாட்டு
போக்குவரத்து பிரிவில் 750 டன், சர்வதேச பிரிவில் 120 டன் வீதம் சரக்குகள் கையாளப்படுகின்றன.
சர்வதேச பிரிவில் மொத்தம் கையாளப்படும் சரக்குகளில் பாண்டட் டிரக் சேவை
பங்களிப்பு 50 சதவீதமாக உள்ளது. ஜெர்மனிக்கு அதிக அளவு காஸ்டிங், வால்வு
உள்ளிட்ட பொறியியல்துறை உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கோவை விமான நிலையத்தில் உள்ள சரக்கக அலுவலகம் ஒரே நேரத்தில் 250 டன்
பொருட்கள் கையாளக்கூடிய கட்டமைப்பு வசதி கொண்டுள்ளது. எதிர்வரும்
நாட்களில் விமான சேவை அதிகரிக்கும் போது அதற்கேற்ப சரக்குகள் கையாளும்
அளவும் பலமடங்கு உயரும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.