முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் தண்ணீரை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.
தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. மொத்தம் 152 அடி உயரம் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி நீர் தேக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 132.35 அடியை கடந்தது. அணையின் கொள்ளளவு 5,247 மில்லியன் கன அடி நீர் உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 239 கன அடி நீர் வெளியேற்றம் 300 கன அடி ஆகும்.
இந்நிலையில் அணையில் போதுமான அளவு நீர் இருப்பதைத் தொடர்ந்து, அணையில் இருந்து உடனடியாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் முதல் போக பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் பாசன பரப்பான 14.707 ஏக்கர் நிலங்களுக்கு முதல் போக பாசனத்திற்காக இன்று முதல் வினாடிக்கு 200 கனஅடி வீதமும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கனஅடி வீதமும் என மொத்தம் 300 கன அடி தண்ணீரை இன்று முதல் அடுத்த 120 நாட்களுக்கு தேவைக்கேற்ப, நீர் இருப்பைப் பொறுத்து, பெரியாறு அணையிலிருந்து திறந்து விட தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று காலை தேக்கடியில் தலைமதகுப் பகுதியிலிருந்து மதகுகளை இயக்கி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் முன்னிலையில் வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தமிழகப் பகுதிக்கு தண்ணீரை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Leave a Reply