முதல் 50 ஆண்டுகள் அண்ணா, பெரியார்… அடுத்த 50 ஆண்டுகள் கலைஞருடையது – நடிகர் கமல்ஹாசன்..!

தமிழ்நாட்டில் தற்போது கலைஞர் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் விகடனுக்கும் கலைஞருக்கும் இருந்த உறவு குறித்து விளக்கும் வகையில், கலைஞர் தொடர்பான செய்திகள், அவர் அளித்த பேட்டிகள் அனைத்தும் காலவரிசைப்படி சரமாகத் தொடுக்கப்பட்டு `கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ என்ற நூல் உருவாக்கப்ட்டுள்ளது.

இந்த நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நூல் வெளியீட்டு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகரும் ம.நீ.ம கட்சி தலைவருமான கமல்ஹாசன், இந்து என்.ராம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். விகடன் பிரசுரத்தின் இந்த நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, நடிகர் கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார்.

தமிழ்நாட்டின் முகவரி விகடனும் கலைஞரும்தான். ஜனநாயகம், சமூகநீதி, கூட்டாட்சி என தென்னாட்டின் முக்கிய முகமாகத் திகழ்கிறார் கலைஞர். தாழக்கிடப்பவரை தற்காப்பதுதான் தர்மம், கலைஞரின் தர்மம் அதுதான். கடந்த நூற்றாண்டில் தமிழ்நாடு வரலாற்றில் முதல் 50 ஆண்டுகள் பெரியார், அண்ணா யுகம் என்றால், அடுத்த 50 ஆண்டுகள் கலைஞரின் யுகம் தான்.

`போராடு’ – இதுதான் கலைஞர் நமக்கு சொல்லும் வாழ்க்கை செய்தி. ‘பள்ளிக்கு அனுமதி அளிக்கவில்லையென்றால் குளத்தில் குதிப்பேன்’ எனப் போராடியதில் அவரது வாழ்க்கை தொடங்கியது. ஆதிக்கச் சாதி வீட்டில் நாயனம் வாசிக்க ாட்டேன், இடுப்பில் துண்டு கட்ட மாட்டேன், இரண்டு முறை ஆட்சிக் கலைப்பு, இரண்டு முறை கட்சிப் பிளவு, மிசா, நள்ளிரவில் கைது, மரணத்துக்குப் பிறகும் தனக்கான இடம் கேட்டுப் போராட்டம் என குளவிக்கூட்டின் புழுப்போல கொட்டப்பட்டு தயாரானவர் அவர்.

காந்திக்கு அடுத்தபடியாக அதிக பக்கங்களை எழுதிய ஒரே அரசியல் தலைவர் கலைஞர்தான். Express வேகத்தில் திரைப்பட வசனம் எழுதுபவர் கலைஞர். 69 ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய வசனம் இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது. என்னைப் போன்ற பல நடிகர்களுக்கு இவர்தான் கேட்பாஸ். கலைஞர் வசனத்தை சொல்ல சொல்லிதான் நடிக்க வருபவர்களின் வாய் சுத்ததை பார்ப்பார்கள்.

வட்டார மொழிகளில் ஊரி திளைத்தவர்களிடத்திலும் தமிழைக் கொண்டு சேர்த்தவர் கலைஞர். சென்னை பாஷையில் நானே திரைப்படங்களில் பேசி உள்ளேன்.12b பஸ்ஸிலே என்ன திருக்குறள் எழுதியிருக்கு என படத்தில் வசனம் பேசியிருக்கிறேன். இத்தாலிய எரிமலைக் குழம்பில் செய்த பேனாவை நான் அவருக்கு பரிசளித்தேன். மருதநாயகம் பட விழவில் கலைஞானி என பட்டம் வழங்கினார்.

தசாவதாரம் படம் எடுக்கும்போது மங்குரோவ் அழிவு குறித்து காட்சி வைத்திருப்பதாக அவரிடம் கூறினேன். ஆனால் அது மக்களுக்கு புரியாது என்பதால் அதை மாற்றிவிட்டு , மக்களுக்கு புரியும் வகையில் மணல் கொள்ளை குறித்து படத்திற்கு எழுத சொன்னார். ‘தசாவதாரம்’ படம் வெளிவந்த பிறகு என் முகத்தில் கிள்ளி வாழ்த்து தெரிவித்தார்.

1989 ல் திமுகவில் ஏன் இன்னும் சேரவில்லை என எனக்கு தந்தி அனுப்பினார் கலைஞர். எனக்கு பயம் , தயக்கத்தால் பதில் சொல்லாமலே இருந்து விட்டேன். ஆனால் என் நிலைமையை புரிந்து கொண்டு ஏன் பதில் தரவில்லை என்ற கேள்வியை என்னிடம் அவர் ஒருபோதும் கேட்கவே இல்லை. விஸ்வரூபம் பட பிரச்சனையின்போது திமுக உன்னுடன் எப்போதும் இருக்கும் என்று கூறினார். எப்போது வேண்டுமானாலும் என்னிடம் வா என்றார்.

ஆலமரத்தின் அடியில் விருட்சங்கள் வளராது என்னும் பொது கூற்றை முறியடித்து, தானும் ஒரு விருட்சமாக வளர்ந்து கொண்டு இருப்பவர்.. ஜனநாயகம், சமூக நீதி, கூட்டாட்சி குரல் ஆகியவற்றை காப்பதில் தென்னிந்தியாவின் முக்கிய தலைவராக திகழ்ந்து கொண்டிருப்பவர்தான் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என்றார்.