கதாநாயகி ஆக்குவதாக ஆசை வார்த்தை கூறி… சென்னை கல்லூரி மாணவியை கற்பழித்த சினிமா தயாரிப்பாளர் கைது..!

கோவை:
சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண், பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். நான் 2019-ம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தேன். எனக்குள் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த சமயத்தில் கரூர் நல்லிப்பாளையத்தைச் சேர்ந்த பார்த்திபன் (32) என்பவர் புதிய சினிமா ஒன்று தயாரிக்கப் போவதாகவும், அதற்கு கதாநாயகி தேர்வு நடப்பதாகவும் கூறி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். சமூக வலைதளங்களில் வந்த அறிவிப்பை பார்த்து நான் பார்த்திபனை தொடர்பு கொண்டேன். அவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கதாநாயகி தேர்வு நடப்பதாகவும், அங்கு வருமாறும் என்னை அழைத்தார்.
நானும் கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசையில் அவர் சொன்ன பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்றேன். அங்கு பார்த்திபன் இருந்தார். அவர், தான் ஒரு சினிமா தயாரிப்பாளர் என கூறி என்னிடம் கேள்விகள் கேட்டார். சிறிது நேரத்தில் குளிர்பானம் கொடுத்தார். அதனை வாங்கி குடித்ததும் நான் மயங்கி விட்டேன். இதனை பயன்படுத்தி பார்த்திபன் என்னை கற்பழித்து விட்டார். மயக்கம் தெளிந்து விழித்ததும் அவரை நான் கண்டித்தேன். என்னை சமாதானம் செய்து உன்னை நிச்சயம் கதாநாயகி ஆக்குவேன் என்றார். இப்படி ஆசைவார்த்தைகள் கூறியே மீண்டும், மீண்டும் என்னை வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் நான் கர்ப்பம் ஆனேன். குழந்தை பிறந்தால் சினிமாவில் நடிக்க முடியாது என்று கூறி கருவையும் கலைக்கச் செய்தார்.
நான் என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியபோது மறுத்தார். அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற விவரம் எனக்கு பின்னர் தெரியவந்தது. இதேபோல் மேலும் பல பெண்களை அவர் ஏமாற்றியதையும் நான் அறிந்தேன். என்னை ஏமாற்றி கற்பழித்த பார்த்திபன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் புகாரில் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்து பார்த்திபன் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி தலைமையிலான போலீசார் பார்த்திபனை கைது செய்தனர். கோவை 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பார்த்திபன், பின்னர் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். கரூரைச் சேர்ந்த பார்த்திபன், சமீப காலமாக கோவை சரவணம்பட்டி கே.புதுப்பாளையம் பகுதியில் வசித்து வந்தார். இங்கும் ஒரு பெண்ணை அவர் ஏமாற்றி திருமணம் செய்து நகைகளை மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்தது. அந்த பெண் கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்திருந்தார்.