கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே புஜங்கனூர் பகுதியில் பழங்கள் மற்றும் இதர பொருட்கள் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் திராட்சை, முந்திரி, பெருங்காயம் ஆகியவைகளை மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மொத்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று பொருட்களை மினி வேனில் எடுத்து கொண்டு அங்கு வேலை செய்யும் அசாம் மாநிலத்தை சேர்ந்த இலியாஸ் அஹமத் (வயது 19) என்பவரும் அவருடன் ஜிபன் நோமோசுத்ரா (19)என்பவரும் விற்பனைக்காக சென்றனர்.
விற்பனை முடித்துவிட்டு பணத்தை வசூல் செய்து மீண்டும் 2 பேரும் புஜங்கனூர் உள்ள தொழிற்சாலைக்கு மினி வேனில் வந்தனர். அப்போது கட்டாஞ்சி மலை, தண்டி பெருமாள் கோவில் அருகே வந்தபோது மர்ம நபர்கள் 3 பேர் மினி வேனை வழிமறித்து கண்ணாடியை உடைத்தனர்.மர்ம நபர்கள் அவர்களிடம் இருந்த வசூல் பணம் ரூ.30 ஆயிரத்தை பறிக்க முயன்றனர். அப்போது சுதாரித்துக் கொண்ட தொழிலாளர்கள் 2 பேரும் அவர்களிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை வாகனத்திற்குள் பதுக்கினர்.
அவர்கள் கையில் இருந்த ரூ.10 ஆயிரத்தை மட்டும் மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு அவர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பயந்துபோன இலியாஸ்அஹமத் மற்றும் ஜிபன் நோமோசுத்ரா புஜங்கனூர் தொழிற்சாலை வந்து உரிமையாளரிடம் சம்பவம் குறித்து கூறினர். இதையடுத்து இலியாஸ் அஹமத் காரமடை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply