காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தடை நீட்டிப்பு- உச்சநீதிமன்றம் உத்தரவு ..!

டெல்லி: காவிரி ஆணைய கூட்டத்தில் கர்நாடகாவின் மேகதாது அணை குறித்து விவாதிக்க விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவுகளை செயல்படுத்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் காவிரி நதிநீர் பங்கீட்டை உறுதி செய்யும் ஆலோசனைகளை வழங்கக் கூடியது.

டெல்லியில் காவிரி ஆணையத்தின் 16-வது கூட்டம் கடந்த ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு தன்னிச்சையாக கட்ட முடிவு செய்துள்ள மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என கர்நாடகா அரசு ஆணையத்தின் தலைவர் ஹல்தரிடம் கோரிக்கை வைத்தது. கர்நாடகாவின் இந்த கோரிக்கையை காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமும் ஏற்றது. மேலும் காவிரி ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் எனவும் காவிரி ஆணையம் தெரிவித்தது.

இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காவிரி ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. இதனால் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, கர்நாடகா அரசானது கடந்த 4 ஆண்டுகளாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நதிநீர் பங்கீட்டை பின்பற்றவில்லை. அதேநேரத்தில் மேகதாது எனும் புதிய அணை கட்டவும் முயற்சிக்கிறது. இது தமிழகத்துக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த அணை கட்டுமானம் தொடர்பாக காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க கூடாது. மேகதாது அணை கட்டுமானம் தொடர்பாக விவாதிக்க கூடிய அமைப்பும் அதிகாரமும் காவிரி ஆணையத்துக்கு கிடையாது. ஆகையால் காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். கர்நாடகா அரசு மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான் இதனை கடுமையாக எதிர்த்தார்.

 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தடை விதித்தனர். காவிரி ஆணையக் கூட்டத்தை கூட்டி மற்ர விவகாரங்களை விவாதிக்கலாம் என அனுமதித்தது. மேலும் இவ்வழக்கின் விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மட்டும் காவிரி ஆணைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு அரசின் மனு மீது உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்தியது. இன்றைய விசாரணையின் போது காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது. மேலும் இவ்வழக்கில் அனைத்து தரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டு ஆகஸ்ட் 10-ந் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.