அனைவரும் அதிகம் எதிர்பார்த்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களையும், திமுக 73 இடங்களையும், அதிமுக 53 இடங்களையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளன.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரி தமிழக ஆளுநருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என்றும் அந்த கடிதத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மின்னஞ்சல் வாயிலாக இந்த கடிதத்தை அவர்கள் அனுப்பியுள்ளனர். இந்நிலையில், ஆளுநர் அடுத்து என்ன மாதிரியான முடிவுகளை எடுக்க போகிறார் என்பது தமிழக அரசியலில் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தற்போது தனிப்பெரும் கட்சியாக உள்ளதால் அவரால் ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும். இருப்பினும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால் அவர்கள் ஆட்சியை இழக்க நேரிடும். இதனால் அடுத்த சில நாட்கள் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்கள் தேவை என்ற நிலையில், விஜய்க்கு இன்னும் 10 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அந்த 10 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு யார் மூலம் கிடைக்கப் போகிறது என்பதுதான் தற்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் வசம் 5 எம்.எல்.ஏ-க்களும், பாமக வசம் 5 எம்.எல்.ஏ-க்களும் உள்ளனர். இவர்கள் இருவரும் ஆதரவளித்தால் விஜய் முதலமைச்சராக எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் பதவியேற்க முடியும். இருப்பினும், இவர்கள் இருவரும் ஆதரவளிக்க வேண்டுமென்றால் அவர்கள் சில நிபந்தனைகளுடன் வருவார்கள். அந்த நிபந்தனைகளை தமிழக வெற்றிக் கழகம் ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்த கூட்டணி ஆட்சி சாத்தியமாகும். அவர்கள் என்ன மாதிரியான நிபந்தனைகளை வைக்கப் போகிறார்கள் என்பதுதான் தற்போது தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.





