எல்லோரும் என்னை ‘சின்னவர்’ என்றே அழைக்கலாம்” அதுவே எனக்கு மகிழ்ச்சி.. புதுக்கோட்டை நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!!

என்னை மூன்றாம் கலைஞர் என்று யாரும் அழைக்க வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் உள்ள தடிகொண்ட அய்யனார் திடலில் புதுக்கோட்டை வடக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் திமுகவின் இளைஞர் அணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், பேசுவதைவிட செயல்பட தான் எனக்கு பிடிக்கும். எந்த மாவட்டத்திற்கு என்னை நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கு உதவிசெய்ய , நிகழ்ச்சிக்கு அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் கூறி ஏற்பாடு செய்யச் சொல்லி அந்த நிகழ்ச்சியில் தான் நான் கலந்து கொள்வேன். கடந்த தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியை மக்கள் கொடுத்துள்ளார்கள். திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் தான் இதற்கு காரணம்.

நான் பெரியாரையும் , அண்ணாவையும் நேரில் பார்த்ததில்லை . கலைஞர் கருணாநிதியை பார்த்து வந்துள்ளேன். திமுகவின் தொண்டர்களை பெரியார், அண்ணா , கலைஞர் இவர்களின் மறு உருவமாக பார்க்கிறேன். என் மீது கொண்ட அன்பால் திமுகவினர் என்னை மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்று அழைக்கின்றனர். நான் அவர்களுக்கு ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன், உரிமையாக தெரிவிக்கிறேன். மூன்றாவது கலைஞர் , இளம் தலைவர் என்று என்னை யாரும் அழைக்க வேண்டாம் கலைஞர் என்றால் அவர் கலைஞர் மட்டும்தான் . என்னை அப்படி அழைக்க கூடாது. சிலர் சின்னவர் என்று அழைக்கின்றனர். அதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. காரணம் என்னை விட அனுபவம் வாய்ந்தவர் பெரியவர்கள் பலர் உள்ளதால் நான் சின்னவர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் . நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் திமுகவின் முன்னோடி தொண்டர்கள் 1051 பேருக்கு தலா பத்தாயிரம் வீதம் ரூபாய் ஒரு கோடியே 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் பொற்கிழிகளை வழங்கினார்.