இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு..!

அதிமுக பொதுக்குழுவை இன்று நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி கொடுத்ததை அடுத்த, பொதுக்குழுவும் செயற்குழுவும் தற்போது தொடங்கியுள்ளது.

இதில் இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓ.பன்னீர்செல்வத்தின் வழக்கு, இன்று காலை 9 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதில் அவர் பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கி, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய ஓபிஎஸ்ஸின் மனுவை நிராகரித்து தீர்ப்பளித்தார்.

பொதுக்குழு வேண்டும் என்பதே பெரும்பாலோனோரின் கோரிக்கை. ஆகவே அதற்கு அனுமதி தரப்படுகிறது. அதிமுக கட்சி விதிகளுக்குட்பட்டு பொதுக்குழுவை நடத்த வேண்டும்’ என நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நீதிமன்ற ஆணையை தொடர்ந்து செயற்குழு, பொதுக்குழு தொடங்கியது.

கூட்டத்தில் முதற்கட்டமாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு, அதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தை அவரது ஆதரவாளர்களாக அதிமுகவின் பிற தலைவர்களான ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், பா.வளர்மதி உள்ளிட்டோர் வழிமொழிந்து பின் அவரை வாழ்த்தினர். அதைத்தொடர்ந்து பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கும் தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. போலவே அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் தேர்தலை அடுத்த 4 மாதங்களுக்குள் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.