அமலாக்கதுறை காவலில் எடுக்கலாம்… அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

டெல்லி: தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும்; செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் சட்டவிரோதம் எதுவும் இல்லை; அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கப் பிரிவு காவலில் எடுத்து விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது.

தற்போதைய திமுக ஆட்சியில் அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி,
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்தார் என்பது வழக்கு. இதில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறையும் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. பின்னர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் முதலில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையிலும் பின்னர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். சென்னை தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடினார். அமலாக்கத்துறையின் அதிகார வரம்புகள் தொடர்பாக கபில் சிபல் பல முக்கிய வாதங்களையும் கேள்விகளையும் எழுப்பி இருந்தார். ஆனால் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருக்கிறது என பதில் வாதங்களை முன்வைத்தார். இருதரப்பும் வாதங்களை நிறைவுசெய்த நிலையில் நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் பெஞ்ச் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:-செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும்,செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் சட்டவிரோதம் இல்லை,கைது செய்யப்பட்ட பின்னர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது,அமலாக்கத்துறைக்கு எதிரான செந்தில் பாலாஜி தரப்பு மனு டிஸ்மிஸ்,செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம், செந்தில் பாலாஜி உடல்நிலையை உச்சநீதிமன்றம் பார்த்து கொள்ளும் மேலும் – செந்தில் பாலாஜியை 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம்..