ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடி: ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபருக்கு 10-ஆண்டுகள் சிறை தண்டனை

ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடி: ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபருக்கு 10-ஆண்டுகள் சிறை தண்டனை.

ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடி செய்த ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபருக்கு கோவை நீதிமன்றம் 10-ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை காட்டூர் சாலையில் ரோஜா நகர் என்ற பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான ஈமு கோழிப் பண்ணை செயல்பட்டு வந்தது. இவருடன் லோகநாதன், புவனேஸ்வரி, செல்வம், சாந்தி, ஆகியோரும் பணி புரிந்து வந்தனர்.

பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு விளம்பரம் செய்து ஈமு கோழி நிறுவனத்தில் இரண்டு விதமான திட்டங்களை அறிவித்து முதலீட்டாளர்களை கவர்ந்து அவர்கள் கோழிப் பண்ணையை நடத்தி வந்தனர்.
இரண்டு திட்டங்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் ஆறு ஈமு கோழி குஞ்சுகள் கொடுத்தும் மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் கொடுத்த பணத்திற்கு வட்டியாக கொடுப்பதாகவும் முதலீட்டாளர்களிடம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்பாகவே பணத்தை திருப்பி தராமல் 140 முதலீட்டாளர்களிடம் ஐந்து கோடியே 56 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணத்தை ஏமாற்றி தலைமறைவாகினர்.

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களில் ஒருவரான சென்னிமலையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து கோவை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. மேற்படி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து மொத்தம் 150 சாட்சிகளை விசாரித்த கோவை சிறப்பு நீதிமன்றம்
இன்று அதற்கான தீர்ப்பை வழங்கியது.

இதில் ஈமு கோழிப் பண்ணையை நடத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றிய செல்வகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கோவை சிறப்பு நீதிமன்ற தீர்ப்பளி வழங்கியது. வழக்கில் சேர்க்கப்பட்ட மற்ற நால்வர் விடுதலை செய்யப்பட்டனர்.