சுயத்தொழில் திட்டம் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு – அமைச்சர் உதயநிதி உத்தரவு..!

சென்னை: சுய தொழில் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அரசின் திட்டங்கள் மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்திற்கும் சென்றடைய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் தீனதயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்ய யோஜனா ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து அமுதா ஐ.ஏ.எஸ். அமைச்சர் உதயநிதிக்கு விரிவாக எடுத்துரைத்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், தசுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள்,வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் , சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் வங்கிக் கடன் இணைப்புகள், சுழல் நிதி, இளைஞர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சிகள் குறித்தும் அடைய வேண்டிய இலக்குகள் குறித்தும். சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை குறித்தும் அமைச்சர் உதயநிதி கேட்டறிந்தார்.

இதனிடையே அந்தக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி தெரிவித்ததாவது, “அதிக எண்ணிக்கையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, அரசின் திட்டங்கள் முழுவதும் மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் செயல்படும் சுய உதவிக் குழுக்களையும் சென்றடையும் வண்ணம் செயல்பட வேண்டும். சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பாக ரூ.25,000 கோடி வழங்கப்பட நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விரைந்து அடைந்திட வேண்டும்.”

‘தர மதிப்பீடு செய்யப்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கிட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் சுய வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் அடைந்துள்ள இலக்குகளை விரைந்து அடைந்திட வேண்டும். திட்டத்தின் செயல்பாடுகளை சிறப்பாகவும், விரைவாகவும் செய்து முடித்திட அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நலிவுற்றோர், முதியோர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் ஆகியோர்களை உள்ளடக்கிய சுய உதவிக் குழுக்களை அமைத்திட அதிக அக்கறை காட்டிட வேண்டும்.” இவ்வாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.