ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு… அதுமட்டுமில்லைங்கோ.. இன்னும் இருக்கு..!

சென்னை :வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா 1,000 ரூபாய் ரொக்கம், தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்புகள் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.

இந்தாண்டு வழங்கிய பரிசு தொகுப்பு தொடர்பாக பல புகார்கள் எழுந்ததால், மளிகைப் பொருட்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசு வினியோகத்தை முதல்வர் துவக்கி வைப்பதற்காக, சென்னையில் புதுப் பொலிவுடன் ரேஷன் கடை ஒன்று தயாராகி வருகிறது.

தமிழகத்தில் 2.23 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அரிசி பிரிவில் 2.20 கோடி கார்டு தாரர்களுக்கு இலவச அரிசி, கோதுமை; மானிய விலையில் துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை வழங்கப்படுகின்றன.

மீதி, மூன்று லட்சம் சர்க்கரை கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி தவிர்த்த, மற்ற பொருட்கள் வழங்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி கார்டுதாரர்களுக்கு ரொக்க பணத்துடன் கூடிய பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

அதன்படி, அ.தி.மு.க., ஆட்சியில் 2019, 2020ம் ஆண்டு பொங்கலுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு, 1,000 ரூபாய் ரொக்கத்துடன் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன.

சட்டசபை தேர்தல் காரணமாக, 2021 பொங்கலுக்கு மேற்கண்ட பொருட்களுடன் தலா, 2,500 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், ‘கொரோனா நிவாரணமாக 4,000 ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஜூனில் அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 2,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. ஜூலையில் தலா 2,000 ரூபாயுடன், 14 வகை மளிகை பொருட்களும் வழங்கப்பட்டன.

இந்தாண்டு பொங்கலுக்கு ரொக்க பணம் இல்லாமல், பச்சரிசி, வெல்லம், ரவை, கோதுமை மாவு, மஞ்சள், மிளகாய் துாய், மல்லி துாள், கடுகு, சீரகம், முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு, துணி பை உட்பட 21 பொருட்கள் வழங்கப்பட்டன.

இதற்காக, 1,300 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. வெல்லம், மிளகு உள்ளிட்ட பொருட்கள் தரமற்று இருந்ததாக புகார்கள் எழுந்தன; ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின. பொங்கல் பரிசில் இடம் பெற வேண்டியவை தொடர்பாக, நுகர்பொருள் வாணிப கழகம் கருத்துரு தயாரித்து, தமிழக அரசுக்கு அனுப்பும். அதை பரிசீலித்து, பொங்கல் பரிசு தொகுப்பை அரசு அறிவிக்கும்.

வரும் 2023 பொங்கல் பரிசில் எந்த பிரச்னையும் ஏற்படக் கூடாது என அதிகாரிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.எனவே, இந்த முறை வாணிப கழகத்திடம் கருத்துரு பெறாமல், பொங்கல் பரிசில் என்னென்ன பொருட்களை இடம் பெறச் செய்யலாம் என, உணவு, கூட்டுறவு, நிதித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வந்தனர்.

அதன் அடிப்படையில், 1,000 ரூபாயுடன், தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன், 200 மி.லி., ஆவின் நெய் வழங்க திட்டமிடப்பட்டது. இதற்கான அறிவிப்பு, இம்மாத முதல் வாரத்தில் வெளியாக இருந்தது.

திடீரென ‘மாண்டஸ்’ புயல் மற்றும் அதைத் தொடர்ந்து பெய்த கன மழையால், பல இடங்களில் சேதம் ஏற்பட்டது. இதனால், பொங்கல் பரிசு அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டது. புயலால் ஏற்பட்ட இழப்பு, ஆவின் நெய் விலை உயர்வு ஆகியவற்றால், பொங்கல் பரிசில் நெய் இடம் பெறவில்லை.

இந்நிலையில், பொங்கல் பரிசு தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதில், பொங்கல் பரிசு தொகுப்பு இறுதி செய்யப்பட்டது. அதன்படி, தலா 1,000 ரூபாய் ரொக்கத்துடன், தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை ஆகியவை அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நேற்று மதியம் வெளியிடப்பட இருந்தது. பின், பொங்கல் பரிசு வினியோகத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கும் தேதியுடன் சேர்த்து, பரிசு தொகுப்பை அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.

எனவே, பொங்கல் பரிசு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம்.

முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று, உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்கிறார். எனவே, பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை ஸ்டாலின், தலைமை செயலகத்தில் இருந்து துவக்கி வைப்பதற்கு பதில், ஏதேனும் ஒரு ரேஷன் கடையில் துவக்கி வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக, அவரின் வீடு அருகில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரேஷன் கடை தேர்வு செய்யப்பட்டு, அந்த கடையில் சேதமடைந்த பகுதிகளை சரி செய்து, வண்ணம் பூசும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

சென்னை :வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா 1,000 ரூபாய் ரொக்கம், தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்புகள் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.