பைக் வாங்கியதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை..

கோவை: பொள்ளாச்சி கோட்டூர் கரையான் செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவரது மகன் முருகேஷ் (20). கூலி தொழிலாளி.

முருகேஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி நாட்களை கழித்து வந்தார். இதனை அவரது தந்தை, மகன் முருகேசுக்கு அறிவுரை கூறி வேலைக்கு செல்லுமாறு அறிவுரை கூறினார். ஆனாலும் அவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் முருகேஷ் தவணைக்கு புதியதாக ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கினார். இதனை பார்த்த அவரது பெற்றோர் அவரை கண்டித்தனர்.
இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் ஆத்துமேடு பகுதிக்கு சென்று விஷத்தை குடித்தார். சிறி து நேரத்தில் மயங்கி விழுந்தார்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முருகேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் வாங்கியதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.