அதிமுக தலைமை அலுவலகத்தில் அவசர கூட்டம்: இன்று மாலை கூடுகிறது- ஓபிஎஸ்-ஈபிஎஸ் பங்கேற்பு.!!

அதிமுக ஒன்றிய, நகர, பேரூராட்சிகளை சேர்ந்த அ.தி.மு.க கழக நிர்வாகிகளுக்கான உட்கட்சி தேர்தல், அக்கட்சியின் தலைமையால் அண்மையில் அறிவிக்கப்பட்டு மாவட்டங்கள் தோறும் நடைபெறுகிறது.

இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்ளும் அவசர கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை தொடர்பாக இந்த கூட்டத்தில் பேசப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக உட்கட்சி தேர்தலில் ஒரு சில மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது எனவே இந்த பிரச்சனை தொடர்பாக விவாதிக்கபடும் என கூறப்படுகிறது. மேலும் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக ஒரு சிலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இந்த பிரச்சனை இன்றைய கூட்டத்தில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை நடைபெறவுள்ள கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக சார்பாக பேசவுள்ள பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, முதலமைச்சர் துபாய் பயணம் உள்ளிட்டவைகள் குறித்து தினந்தோறும் பிரச்சனை எழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மானிய கோரிக்கையின் போது நடைபெறவுள்ள விவாதத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் கலந்து கொண்டு பேசுவது குறித்தும் முடிவு செய்யப்படவுள்ளதாக தெரிகிறது.