மதுரை: தாலிக்கு தங்கம் திட்டம்தான் உயர் கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டமாக மாற்றப்பட்டுள்ளது என்று மதுரையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மதுரை மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாநகராட்சி வெள்ளிவீதியார் பள்ளியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: இரு தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் கல்வி மற்றும் மகளிர் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த சமுதாயங்களில் பெண்கள் முன்னேற்றம் அடைகிறார்களோ, அச்சமுதாயம் வளர்ச்சியின் பாதையில் செல்லும். நல்ல சமுதாயமாக அமையும். திமுகவிற்கும் மற்ற கட்சிகளுக்கும் ஆட்சியில் இரு வேறுபாடு உள்ளது. மனிதநேயத்துடன், மக்கள் மீது அக்கறையுடன் ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு சட்டமும் ஒவ்வொரு நிதியும் ஒதுக்கீடு செய்வதுதான் திமுகவின் அடையாளம். ஆதரவற்றோர், பின்தங்கியிருப்பவர்கள், வாய்ப்பில்லாதவர்களுக்கு எங்கள் திட்டங்கள் போய்ச்சேர வேண்டும். இதுதான் முதல் முக்கியத்துவம்.
எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்தாலும் கொள்கை என்பது திராவிட மாடல்தான். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம் ஆராய்ந்து பார்க்கப்பட்டது. அதில் குளறுபடிகள், தவறுகள் அதிகம் இருந்ததுடன் பிழைகள் இருந்தது. அதனை சரிசெய்யவே முடியாது. இதனை திருத்தி பெண்கள் முன்னேற்றத்திற்கேற்ப கல்வித்திட்டமாக மாற்றி விட்டோம். இடைநிற்றல் இல்லாமல் அரசு பள்ளியில் பிளஸ் 2 முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரும் திட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் பெண்களுக்கு சிறந்த எதிர்காலம் திருமணம் செய்வது. தற்போது, நல்ல கல்வி பெற்று தானாக வளர்ந்து பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள். இதுதான் திராவிட மாடல் அரசாங்கம். இவ்வாறு அவர் பேசினார்.
Leave a Reply