கோவை: பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாட்களில் ரூ 49 கோடிக்கு மது விற்பனை.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 284 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் நிர்வாக வசதிக்காக கோவை வடக்கு, கோவை தெற்கு என்று 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை வடக்கு பகுதியில் 155 டாஸ்மாக் கடைகளும், கோவை தெற்கு பகுதியில் 129 கடைகள் உள்ளன. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையொட்டி கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் மது விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சராசரியாக ரூ 7 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும். ஆனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 13ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை தொடர்ச்சியாக விடுமுறை அளித்ததால்மது விற்பனை அதிக அளவுஇருந்தது. அதில் கடந்த 16ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் விடுமுறை. 17ஆம் தேதி தவிர பிற நாட்களில் கோவை வடக்கு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ 28 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது . கோவைதெற்கு பகுதியில் ரூ 21 கோடிக்கு மது விற்பனை ஆனது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ரூ.49 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.