எடப்பாடி தரப்பு மேல்முறையீடு: உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை..!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு முறையீடு செய்துள்ளது.

இந்த மனுவை விரைந்து விசாரிக்குமாறு நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் இபிஎஸ் தரப்பு முறையீடு செய்தது. நாளை மறுநாள் விசாரணைக்கு பட்டியலிடப்படும், அதுவும் தலைமை நீதிபதி அனுமதி பெற்று பட்டியலிடப்படும் என நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை எழுந்துள்ளது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு செவிமடுக்க மறுத்து வருகிறது.

இந்த சூழலில் தான் ஜூன் 23ல் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. ஆனால், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஜூன் 22ல் விசாரணை நடத்தப்பட்டது. விடியவிடிய நடந்த விசாரணையில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களை பதிவு செய்த நீதிபதி பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர்த்து வேறு புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என உத்தரவிட்டார்.

பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் இந்த உத்தரவு காரணமாக அது நிறைவேறாமல் போனது. ஆனால், திட்டமிடப்பட்டபடி, பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.

அப்போது, 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான், பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமிதரப்பில் சென்னை உயர்நீ திமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கேவியிட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யார் மேல்முறையீடு செய்தாலும் தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று ஓ.பி.எஸ் தரப்பு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.