விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மினி வேன் கவிழ்ந்து விபத்து:வாலிபர் பலி- 20 பேர் படுகாயம்..

கோவை:
மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் இந்து முன்னணி சார்பில் நேற்று 150
சிலைகள் வனப்பத்திரகாளியம்மன் கோவில் பகுதியில் உள்ள பவானி ஆற்றில்
ஊர்வலமாக சென்று கரைக்கப்பட்டன.

இதையொட்டி காரமடையில் இருந்து தோலம்பாளையம் சாலையில் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இதில் காரமடை கே.ஆர்.நகரில் வைத்திருந்த விநாயகர் சிலையை கரைக்க ராமன் மகன் பாபு(26) என்பவர் பிக்கப் வாகனத்தில் சென்றார். அவருடன் 20க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
அப்போது மருதூர் அருகே சென்ற போது மினிவேன் திடீரென கட்டுப்பாட்டை
இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில் வாகனத்தில் சென்ற காரமடை சிறுமுகை சாலை சிவா நகர் பகுதியை சேர்ந்த
சந்தோஷ்(20), காரமடை கே.ஆர்.நகரை சேர்ந்த சந்தோஷ்குமார்(19), இவரது தம்பி
விமல் குமார்(17), பிரகாஷ்(16), பசுபதி(23), சந்துரு (20), அர்ஜூன்‌ என்ற
சிவா (17), காரமடை சிவா நகர் பகுதியை சேர்ந்த அருண் ராஜ்(28)காரமடை
சிறுமுகை சாலை சேர்ந்த பிவின்(17), வெற்றிவேல்(13), தர்னேஷ்(16),காரமடையை
சேர்ந்த சரண்(17), மனோஜ்(24), சக்திவேல்(17), அருண் பிரசாத்(12), தருண்
பிரசாத்(13), தமிழரசன்(19) கே.புங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த
ராம்குமார் (36) காரமடை சிறுமுகை சாலை ஜிபின்(18), காரமடை சிறுமுகை சாலை
போயர் சந்து பகுதியை சேர்ந்த ரமேஷ்(25) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக காயம் அடைந்த அனைவரையும் மீட்டு காரமடை, மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் ரமேஷ் என்பவர் மட்டும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காரமடை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.