சென்னை மற்றும் மண்டபத்தில் நடத்திய சோதனையில் ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்.!!

சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் மண்டபம் கடலோர காவல் படையினர் இணைந்து சோதனை நடத்தினர். 99 கிலோ எடையுள்ள ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்து 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்..

போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக சென்னை வருவாய் புலனாய்வுத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துக்கு அப்பால் மன்னார் வளைகுடாப் பகுதியில் வருவாய் புலனாய்வுத் துறை மற்றும் இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தத் தேடுதல் வேட்டையின் போது இலங்கையை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு நாட்டுப்படகை அதிகாரிகள் பிடித்தனர் . படகை இடைமறித்து அதிகாரிகள் சோதனையிட்டதில், படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  5 சாக்குகளை கைப்பற்றினர்.பிடிபட்ட சாக்குகளில் 99 கிலோ எடையுள்ள ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றினர்.

கடத்தலில் ஈடுபட்ட படகையும், அதிலிருந்த 4  பேரையும் மண்டபத்தில் உள்ள கடலோர காவல்படை அலுவலகத்திற்கு அழைத்துவந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது, போதைப் பொருள் கடத்தியதை அந்த நபர்கள் ஒப்புக்கொண்டனர். பாம்பனைச் சேர்ந்த ஒருவர், தங்களிடம் இந்தப் போதைப் பொருளைக் கொடுத்து, நடுக்கடலில் வரும்  இலங்கை நபர்களிடம் ஒப்படைத்து விடுமாறு கூறியதாகவும், அதன்படி போதைப் பொருளை எடுத்துச் சென்றதாகவும், பிடிபட்டவர்கள் தெரிவித்தனர்.பிடிபட்டவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் அதிகாரிகள், போதைப் பொருளை ஒப்படைத்த நபரை அவரது வீட்டிலேயே கைது செய்தனர். இது குறித்து 4 பேரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது..