சென்னையில் 5 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை.!!

ஜி20 நிதி பணிக்குழு மாநாட்டையொட்டி சென்னையில் இன்று முதல் 5 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜி20 நாடுகள் அமைப்புக்கு இந்தியா தற்போதைய தலைமை ஏற்றுள்ளது. இந்த அமைப்பின் நிதி பணி குழு மாநாடு சென்னை மாமல்லபுரத்தில் நாளை முதல் ஜூன் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இவர்கள் சென்னையில் பல்வேறு பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இதனையடுத்து சென்னை பெருநகர காவல் துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜி20 பெண்கள் பிரதிநிதிகள் மாநாட்டையொட்டி இன்று முதல் ஜூன் 22ஆம் தேதி வரை 5 நாட்கள் சென்னையில் வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகை தரும் இடங்கள், தங்கும் இடங்கள், பயணம் செய்யும் வழித்தடங்கள் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்படுகின்றன.

எனவே அந்த பகுதிகள் மற்றும் வழித்தடங்களில் இன்று முதல் ஜூன் 22ஆம் தேதி வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார்.