என்ன ஒரு புத்திசாலித்தனம்!! பறந்தது டிரோன்… முறைகேடாக மது விற்ற டாஸ்மாக் ஊழியர்கள்- நூதன முறையில் மடக்கி பிடித்த நாமக்கல் போலீஸ்.!!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் கள்ள மது விற்பனை அதிகம் நடப்பதாகப் புகார்கள் பல தொடர்ந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, குமாரபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் தவமணி தலைமையிலான போலீஸார், தொடர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோதமாக போலி மது விற்பனை செய்த பலரையும் போலீஸார் கைது செய்தனர். அதோடு, டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், டாஸ்மாக் ஊழியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, ‘ஒருவருக்கு ஒரு பாட்டில் மட்டும் விற்பனை செய்ய வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளையும் போலீஸார் விதித்தனர்.

இருப்பினும், தொழிலாளர்களைக் குறிவைத்து, டாஸ்மாக் மதுபான வகைகள் டாஸ்மாக் ஊழியர்களால் கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது என போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், முறைகேடாக மது விற்பனை செய்பவர்களை நூதன முறையில் கண்டுபிடிக்க போலீஸார் முயன்றனர்.

அதாவது, டிரோன் கேமரா மூலம், குமாரபாளையம் நகரிலுள்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் போலீஸார் திடீர் ஆய்வு செய்தனர். இந்த நூதன சோதனை மூலம், பல்லக்காபாளையம் டாஸ்மாக் கடை அருகே பார் மற்றும் டாஸ்மாக் கடை ஊழியர்களால், அதிக விலைக்கு மது விற்கப்பட்டதை கையும், களவுமாகக் கண்டுபிடித்து, அவர்களிடமிருந்து 50 பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இதில், வளையக்காரனூர் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரைக் கைதுசெய்தனர். இவர் டாஸ்மாக் கடை எண் 6015-ல் மேற்பார்வையாளர், அம்மன் நகரைச் சேர்ந்த சுப்புராஜா, அதே கடை விற்பனையாளரான கத்தேரி, சாமியம்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. தலைமறைவானவர்களை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர். டிரோன் கேமரா மூலம் நூதன முறையில் முறைகேடாக மது விற்பனை செய்தவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கும் சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.