திராவிட மாடல் வாரிசு அரசியலை மையப்படுத்தி தான் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது- வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேட்டி..!

கோவை தெற்கு தொகுதி புலியகுளம் அருகே உள்ள அம்மன் குளம் பகுதியில் 66 வது வார்டில் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திர திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இயந்திர மையத்தை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவங்கி வைத்தார்.

இதைத் தொடர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது:-

24 மணி நேரமும் ஆரோ தண்ணீரை பெற்றுக் கொள்ளும் தானியங்கி எந்திரத்தை திறந்து வைத்து உள்ளதாகவும் மேலும் இரண்டு இயந்திரங்களை திறந்து வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். தமிழகத்தின் அமைச்சரவையில் புதிதாக ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டு உள்ளார் என தெரிவித்த அவர், அரசியல் ரீதியாக அவர் அனுபவம் உள்ளவர் எனவும் சக உறுப்பினராக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். அதே வேளையில், மாநில முதல்வருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்து இருந்தேன்.
திராவிட மாடலின் அடிப்படை சமூக நீதி என்றால் அந்த சமூக நிதி சம நீதியாக இருக்க வேண்டும் என்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு துணை முதல்வர் பதவியோ, அல்லது முக்கிய இலாகாக்களின் பதவியோ வழங்கவில்லை. கட்சியில் இருக்கும் தலைவரின் மகனுக்கு இந்த பதவியை வழங்கி உள்ளனர். திராவிட மாடல் என்பது வாரிசு அரசியலை மையப்படுத்தி தான் என்பதை இது மீண்டும் நிரூபிக்கிறது என்றார். இது ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு விஷயம் எனவும் தெரிவித்தார். இவர்கள் பேசுவது எல்லாம் குடும்ப அரசியல் வாரிசு அரசியலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டு இருப்பதாக தெரிவித்தார். பட்டியல் இனத்தவருக்கு முக்கிய இலாக்காக்கள் கொடுக்கவில்லை என்றார்.

பா.ஜ.க வில் கடைநிலை ஊழியரும் கூட நாட்டின் உயர்ந்த பொறுப்புகளுக்கு வர முடியும் என்கின்ற உண்மையான ஜனநாயகத்தை நாங்கள் பிரதிபலித்துக் கொண்டு இருக்கிறோம் என்றார். கர்நாடகா தேர்தலை பொருத்தவரை நாங்கள் மக்களை நம்புகிறோம். மக்கள் ஆதரவு பா.ஜ.க விற்கு உள்ளது. எனவே இரண்டு நாட்களுக்கு கருத்துக் கணிப்பை வைத்து நேரத்தை போக்கிக் கொள்ளலாம். விவசாயிகளுக்கு வருமானம் இரட்டிப்பாக வேண்டும் என்பது ஒரு புறம் இருந்தாலும் கூட அவர்களுக்கு உரத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வது தேவையான நீர் கிடைப்பது ஆகியவற்றை எல்லாம் உறுதி செய்கின்ற மத்திய அரசு விவசாயிகள் எந்தவித இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு இன்சூரன்ஸ் வாயிலாக இழப்பீடு கொடுக்க வேண்டும் என்பதை கொண்டு வந்தது மோடி அரசு தான் எனத் தெரிவித்தார்.
கனிம வள கொள்ளை தினமும் இரவு நேரத்தில் நடைபெறுகிறது. நூற்றுக் கணக்கான லாரிகளில் கனிம வளம் கடத்தப்படுகிறது . இராண்டு ஆண்டு ஆட்சி சாதனை அல்ல வேதனை தான் என்றார். முதலமைச்சர் சட்ட சபையில் சட்டம் – ஒழுங்கை பற்றி பேசுகிறார். ஆனால் செயலில் எதுவும் இல்லை என குற்றம் சாட்டினார். கவர்னரின் செயல்பாடு முழுக்க முழுக்க அரசியல் அமைப்புச் சட்டம் சார்ந்தது. பா.ஜ.க மாநில தலைவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை என்கிறார்கள்.
குடும்பமே சேர்ந்து நோட்டீஸ் அனுப்புகிறார்கள் என தெரிவித்தார். மேலும் தி.மு.க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் பி.டி.ஆர் ஆடியோவின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

தி.மு.க அரசு இருக்கும் வரை இந்து மத நம்பிக்கையை கொச்சைப்படுத்த அனுமதிக்கிறார்கள்.
போலீஸ் பாதுகாப்புடன் கேரளா ஸ்டோரி படம் ரிலீஸ் செய்தனர். ஆனால் மறைமுகமாக தியேட்டர்காரர்கள் மிரட்டப்பட்டனர் என தெரிவித்தார்.