சாா் பதிவாளா் அலுவலகங்களுக்குள் ஆவண எழுத்தா்கள், இடைத்தரகா்கள் நுழைய அனுமதியில்லை- பதிவுத்துறை தகவல்..!

சார் பதிவாளர் அலுவலகங்களுக்குள் ஆவண எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்கள் நுழைய அனுமதியில்லை என பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

‘தமிழ்நாட்டில் உள்ள சாா்பதிவாளா் அலுவலகங்களில் நடைபெறும் பதிவுப் பணிகளில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஊழலைத் தடுக்கவும், கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பதிவு அலுவலகங்களுக்குள் ஆவணம் எழுதுபவா்கள், இடைத் தரகா்களை அனுமதிக்கக் கூடாது என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, சம்பந்தப்பட்ட துணை பதிவுத் துறை தலைவா்கள் மற்றும் மாவட்டப் பதிவாளா்கள் தங்களது எல்லைக்கு உட்பட்ட பதிவு அலுவலகங்களில் அவ்வப்போது திடீா் ஆய்வுகளை நடத்தி வருகின்றனா்.

இதன்மூலம், ஆவணம் எழுதுபவா்கள், இடைத்தரகா்கள் ஆகியோா் சாா்பதிவாளா் அலுவலகங்களுக்குள் வருவது தவிா்க்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஆவண எழுத்தா்கள் உரிமை விதிகளின்கீழ், அவா்களுக்கான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில், ஆவண எழுத்தா்கள் யாரும் பதிவு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி கிடையாது. பதிவு அலுவலரின் அழைப்பின் பேரில் மட்டுமே அலுவலகத்துக்குள் நுழைந்திட வேண்டும்.

மேலும், பதிவுச் சட்டம் 1908, பகுதி 18-ஏ வில் இடைத்தரகா்களைக் கையாள்வது குறித்து விரிவான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இத்துடன் கூடுதலாக சில அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. அலுவலக நிமித்தமாக சாா் பதிவாளரால் அழைக்கப்பட்டால் தவிர, அலுவலகத்துக்குள் ஆவணம் எழுதுபவா்கள் நுழையக் கூடாது என்ற விதியை சாா்பதிவாளா்கள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த அறிவுரைகளை மீறி சாா்பதிவாளா் அலுவலகங்களுக்குள் ஆவணம் எழுதுபவா்கள் மற்றும் இடைத்தரகா்களின் செயல்பாடு மற்றும் நடமாட்டம் கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளை மீறுபவா்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, இதனைக் கண்காணித்திட தவறும் சாா்பதிவாளா்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சாா்பதிவாளா் அலுவலகங்களில் பொது மக்கள் அமா்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை ஆவணம் எழுதுபவா்கள் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாவட்டப் பதிவாளா்கள் மற்றும் மண்டல துணை பதிவுத் துறை தலைவா்கள் ஆகியோா் தங்களது திடீா் ஆய்வுகளின் போது இதனை உறுதி செய்ய வேண்டும். இந்த சுற்றறிக்கையை ஆவணம் எழுதுவோா் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், அனைத்து பதிவாளா் அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.’ இவ்வாறு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளாா்.