நண்பரின் திருமணத்துக்கு சென்ற போது தகராறு: கூலி தொழிலாளிக்கு கத்தி குத்து-3 பேர் தப்பி ஓட்டம்.!!

கோவை கள்ளிப்பாளையததை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 22). கூலி தொழிலாளி. இவரது நண்பர்கள் ஆலாந்துறையை சேர்ந்த மனோஜ், சதிஷ், சபரி.
சம்பவத்தன்று நண்பர்கள் 4 பேரும் ஆலாந்துறையில் உள்ள நண்பரின் திருமணத்துக்கு சென்றனர். அங்கு பிரசாந்த், மனோஜ், சதிஷ், சபரி ஆகியோர் மது குடித்தனர்.
மது தீர்ந்ததால் மீண்டும் மது வாங்க ஆலாந்துறை டாஸ்மாக் கடைக்கு 4 பேரும் நடந்து சென்றனர். அப்போது பிரசாந்திற்கும், மனோஜ், சதிஷ், சபரி ஆகியோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது திடீரென தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த மனோஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரசாந்தை குத்தினார். சதிஷ் மற்றும் சபரி அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து சரமாறியாக தாக்கினர். பின்னர் அங்கிருந்து 3 பேரும் தப்பி சென்றனர்.
இதில் பலத்த காயம் அடைந்த பிரசாந்த் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து வலியால் அலறி துடித்தார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
பின்னர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து பிரசாந்த் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மனோஜ், சதிஷ், சபரி ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.