கோவை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை..!!

கோவை பீளமேடு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு, தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியின் www.tnpoly. in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரியின் சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இக்கல்லூரியில் பட்டய பாடப் பிரிவில், ஆங்கில வழியில் சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூ னிகேஷன் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், புரோடக்ஷன் என்ஜினீயரிங், இ.சி.ஜி டெக்னாலஜி ஆகிய 7 படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் நேரடி 2-ம் ஆண்டு பட்டய படிப்பில் சேர பிளஸ்-2 தேர்ச்சி அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் ஐ.டி.ஐ.யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பகுதி நேர பட்டய சேர்க்கைக்கு 10-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ 2 வருடம் இருக்க வேண்டும். இது 4 ஆண்டு படிப்பாகும்.
இந்த படிப்புகளுக்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.150, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் விண்ணப் பணத்தை செலுத்தலாம். விண்ணப்பிக்க வரும் ஜூலை 8-ந் தேதி கடைசி  நாளாகும்.
மேலும், கோவை பீளமேடு அரசினர் பாலி டெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டில் சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் பிரிவு தமிழ் வழியில் பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர இ.சி. ஜி டெக்னாலஜி என்ற புதிய பாடப்பிரிவுகளில் தலா 60 இடங்கள் உள்ளன.

இவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கப்படும். தமிழ் வழி கல்வி பயில ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்த படிப்புகளை தேர்வு செய்யலாம். அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை வழங்கப்படும். ஆண்டு கட்டணம் ரூ.2,500க்கு கீழ் இருக்கும் என கல்லூரியின் முதல்வர் தேன்மொழி தெரிவித்தார்.