18 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் – அமேசான் எடுத்த அதிரடி முடிவு..!

வாஷிங்டன்: கடினமான பொருளாதார சூழலை காரணம் காட்டி, ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மேலும் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் உலகம் முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். கடந்த ஆண்டு நவ.,ல் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. செலவினங்களைக் குறைப்பதற்காக இந்த லே ஆஃப் நடவடிக்கையை செய்ததாக அமேசான் தெரிவித்தது.இந்நிலையில், இன்று காலை, அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘தற்போது நிலவும் பொருளாதார சூழல் கடினமாக உள்ளது. இதை சமாளிப்பது மிகவும் சவாலாக உள்ளது. இதனால், மேலும் 18 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிநீக்கம் அனைத்து துறைகளிலும் பணியாற்றும், அனைத்துவிதமான ஊழியர்களுக்கும் பொருந்தும்’ எனத் தெரிவித்துள்ளார். 18 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் என்பது அமேசான் வரலாற்றில் மிகப்பெரிய எண்ணிக்கை ஆகும். இதுவரை இவ்வளவு அதிகமான ஊழியர்களை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.’விழா, விடுமுறைக் காலங்கள் தான் அமேசானின் விற்பனை இலக்கு. ஆனால் இந்த ஆண்டு இந்த காலங்களில் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை. நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் கையில் பணப்புழக்கம் இல்லை. விலைவாசி உயர்வால் பணப்புழக்கம் இல்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. லாபம் இல்லாததால் லே ஆஃப் நடவடிக்கையை அமேசான் கையிலெடுத்துள்ளது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.