16 இடங்களில் குண்டு வீசப்படும்- பொள்ளாச்சி காவல் நிலையம் வந்த மிரட்டல் கடிதத்தால் பெரும் பரபரப்பு..!!

கோவை: இந்தியா முழுவதும் கடந்த வாரம் பிஎப்ஐ அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் தமிழகத்திலிருந்து 11 பேரையும், இந்தியா முழுவதும் 247 பேரையும் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

16 இடங்களில் குண்டு வீசப்படும்... காவல்நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் - போலீசார் உஷார்...

கோவையின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பு அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் கோவை முழுவதும் பதற்றம் நீடித்தது. இதனிடையே பி.எப்.ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது மத்திய அரசு. பி.எப்.ஐ-யின் துணை அமைப்புகளுக்கும் இந்த தடை பொருந்தும் என அறிவித்துள்ளது.
பி.எப்.ஐ அமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை உடனடியாக அமலுக்கு வருவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதனால் கோவை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மாநகரில் டவுன்ஹால், உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனுடையே பொள்ளாச்சியில் குண்டு வீசப்படும் என்று பொள்ளாச்சி நகர காவல் நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது பொள்ளாச்சி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில், “திரு காவல் துறை ஆய்வளர் அவர்கள், பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும். காவல் துறை எங்களுக்கு எதிரியல்ல. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐ குமரன் நகர், பி.எப்.ஐ குமரன் நகர்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து பொள்ளச்சியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.