மாஸ்கோ: உக்ரைனில் குடியிருப்பு பகுதிகளில் ரஷ்யா மூலம் நடத்தப்படும் தாக்குதல்களை இந்தியா தட்டிக்கேட்க வேண்டும் என்று அமெரிக்காவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
ரஷ்யா – உக்ரைன் போரில் இந்தியா தொடர்ந்து நடுநிலையான நிலைப்பாட்டை மட்டுமே எடுத்து வருகிறது. ஐநா சபை கூட்டங்கள் எதிலும் இந்தியா ரஷ்யாவை எதிர்க்கவில்லை.
நேற்றும் கூட ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், இரண்டு நாட்டு அமைதிக்கு பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்றுதான் இந்தியா கூறியது. மாறாக ரஷ்யாவை இந்தியா எதிர்க்கவில்லை. அதேபோல் உக்ரைனுக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.
மேற்கு உலக நாடுகள் சேர்ந்து வந்து இந்தியாவை எதிர்த்தாலும் இந்தியா இதில் ரஷ்யாவை எதிர்க்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில்தான் ரஷ்யாவின் தாக்குதல் முறைகளை இந்தியா கண்டிக்க வேண்டும் என்று அமெரிக்க தலைவர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிகள் ரோ கண்ணா, மற்றும் ஜோ வில்ஸன் ஆகியோர் நேற்று அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்துவுடன் பேசினர்.
சுமார் 1 மணி நேரம் இவர்கள் ஆலோசனை நடத்தினர். அதில் உக்ரைனில் புடின் மோசமான தாக்குதல்களை நடத்தி வருகிறார். ராணுவ தளவாடங்களை மட்டுமின்றி பொது மக்கள் வசிக்கும் இடங்களில் கூட புடின் தாக்குதல் நடத்தி வருகிறார். இதை இந்தியா தட்டிக்கேட்க வேண்டும். அமைதிக்கும் இந்தியா வழி வகுக்க வேண்டும். இந்தியா தனது ராஜாங்க ரீதியான முறைகளில் பேச்சுவார்த்தைக்கு வழி வகுக்க வேண்டும்.
தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி இந்த போரில் அமைதியை ஏற்படுத்த இந்தியா முயற்சி செய்ய வேண்டும் என்று இரண்டு பேரும் இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர். முன்னதாக ரஷ்யாவிடம் கூடுதல் கச்சா எண்ணெய் வாங்கும் முடிவை வெள்ளை மாளிகை விமர்சனம் செய்து இருந்தது. அதில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியாவின் செயல்பாடு அமெரிக்கா விதிமுறைகளுக்கு எதிரானது கிடையாது. அமெரிக்கா போட்டு இருக்கும் பொருளாதார தடைகளுக்கு எதிரானது இது என்று சொல்ல முடியாது. இந்தியா விதிகளை மீறுவதாக நான் நினைக்கவில்லை.
ஆனால்.. இந்தியா இந்த போரில் எந்த பக்கம் நிற்கிறது என்று பார்க்க வேண்டும். இந்தியாவின் முடிவு அவர்களை வரலாற்றில் தவறான பக்கத்தில் நிற்க வைத்துவிடும். வரலாறு எழுதப்படும் போது இந்தியா தவறான பக்கத்தில் நின்றுவிடும். ரஷ்யாவை ஆதரிக்கிறீர்களா. அவர்க்ளின் போரை ஆதரிக்கிறீர்களா… அல்லது உக்ரைன் பக்கம் நிற்கிறீர்களா என்பதை இந்தியா முடிவு செய்ய வேண்டும், என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை அப்படி அமெரிக்கா விமர்சனம் செய்த நிலையில்தான் அதே இந்தியாவிடம் அமெரிக்கா உதவி கேட்டு உள்ளது
Leave a Reply