சென்னை டு கோவை… விமானத்தில் சுற்றுலா வந்த ஆதரவற்ற மாணவர்கள்- கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் வரவேற்பு ..!

கோவை:
தனியார் சமூக அமைப்பு அண்மையில் சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் ஆய்வு நடத்தியது. அங்கு வசிக்கும் பல குழந்தைகளுக்கு தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்பது பெரும் ஆவலாக இருந்தது. அத்தகை குழந்தைகளின் கனவை நனவாக்க தனியார் சமூக அமைப்பானது, தனியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வானமே எல்லை என்ற ஒரு நாள் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 26 குழந்தைகள், இன்று காலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்துவரப்பட்டனர். இதில் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி மாணவரும், ஒரு திருநங்கை மாணவியும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வந்திறங்கிய மாணவ மாணவிகளை கோவை விமான நிலையத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், வருவாய் பிரிவு அதிகாரி பூமா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் கோவை அறிவியல் மையம், ஜி.டி நாயுடு அருங்காட்சியகம் மற்றும் உக்கடம் குளக்கரையில் உள்ள ஐ லவ் கோவை ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்து மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பின்னர் இரவு மீண்டும் கோவையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் அழைத்து செல்லப்பட உள்ளனர்.
இதுகுறித்து விமானத்தில் வந்த மாற்றுத்திறனாளி மாணவர் மோகன் (வயது 30) கூறியதாவது, நான் பி.ஏ, பி எட் படித்துள்ளேன். முதல் முறையாக இன்று விமானத்தில் பயணம் செய்தேன். விமானத்தில் பயணம் செய்ய உள்ளேன் என்பதை தெரிந்து கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் எனது உடன் 26 மாணவர்கள் இருந்ததால் தைரியம் ஏற்பட்டது. இன்று கோவையை சுற்றி பார்க்க உள்ளோம். எனக்கு கண் பார்வை இல்லாததால் எனது நண்பர்களிடம் சுற்றி பார்க்கும் இடங்களை கேட்டு தெரிந்து கொள்வேன் என்றார்.
திருநங்கை மாணவி மோனிகா (18) கூறும்போது, விமானத்தில் பயணம் செய்யும்போது கொஞ்சம் பயமாக தான் இருந்தது.சென்னையில் இருந்து புறப்படும்போது, கோவையில் தரையிறங்கும் போதும் பயம் ஏற்பட்டது. அதன் பின்னர் விமானத்தில் பயணம் செய்யும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுடன் திரை பிரபலங்களும் பயணம் செய்தனர். அவர்கள் எங்களுடன் விமானத்தில் ஜாலியாக பேசிக்கொண்டு வந்தனர்.

விமானம் பயணம் குறித்து ஆதரவற்ற மாணவர்கள் கூறியதாவது, விமானம் பயணம் என்பது எங்கள் கனவாக இருந்தது. அது இன்று நினைவாகி உள்ளது. மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம். எங்களுடன் குக் வித் கோமாளி சிவாங்கி உள்ளிட்ட டி.வி பிரபலங்கள் வந்துள்ளனர். இது மேலும் எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. கோவையை பற்றியும். எங்களை வரவேற்பதற்காக கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் இருவரும் வந்துள்ளனர். அவர்களுக்கு எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இன்று நாள் முழுவதும் கோவையில் உள்ள பல இடங்களை சுற்றி பார்க்க மிகுந்த ஆர்வமாக உள்ளோம். கண்டிப்பாக இந்த பயணம் எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.
கலெக்டர் கூறியதாவது, சென்னையில் இருந்து 26 மாணவர்கள் வந்துள்ளனர். அவர்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.இதேபோன்று கோவையில் இருந்து 37 மாணவர்கள் சென்னை சென்றனர். அவர்கள் அங்கு சுற்றி பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தனியார் அமைப்பின் நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெயபால் கூறும்போது, இந்த நிகழ்ச்சியின் மூலமாக குழந்தைகள் தமிழத்தின் முக்கிய நகரமாக விளங்கும் கோவைக்கு சென்று வருவதுடன், அவர்களுடைய வாழ்நாள் கனவாக உள்ள விமான பயண அனுபவத்தை தர முடிந்தது. இதன் மூலம் வளரும் தலைமுறை குழந்தைகளின் மனதில் நம்பிக்கை ஏற்படுத்த முடியும். இந்த பயணம் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு, உலகின் உயரத்தை அறிமுகம் செய்து வைப்பதுடன், மனித நல்லியல்புகளை அடையாளம் காட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த பயணம் கொடுக்கும் அனுபவம் எதிர்கால வாழ்வில் குழந்தைகள் மென்மேலும் உயர வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விமான பயணத்தின் போது மாணவர்களுடன் இயற்கை அறிவியல் ஆய்வாளரும், மாநில திட்டக்குழு உறுப்பினருமான சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், பிரபல பாடகர்களும் சின்னத்திரை நட்சத்திரங்களுமான சிவாங்கி, சாம் விஷால், தனியார் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் வந்தனர்.
இந்த தனியார் சமூக அமைப்பின் நல்லெண்ணத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரியும், இசையமைப்பாளருமான ஏ.ஆர். ரெஹானா உள்ளார்.