கோவையின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது கோவை குற்றாலம். கோவையின் பிரதான சுற்றுலாத்தலமான இந்த பகுதிக்கு உள்ளூர் வாசிகளும், வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்தவர்களும் வந்து செல்கின்றனர்.
இதனிடையே மாண்டஸ் புயலின் தாக்கத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தது. கோவை மாநகர் மற்றும் ஊரகப்பகுதிகளிலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் கோவை குற்றாலத்திற்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, கோவை குற்றாலம் கடந்த 14-ந் தேதி மூடப்பட்டது. தொடர்ந்து பெய்து வந்த மழையினால் கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு அருவிக்கு செல்ல அனுமதி அளிக்கவில்லை.
தற்காலிகமாக மூடப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று வனத்துறை அறிவித்தது.இதனால், பலர் சாடிவயல் பகுதியில் உள்ள நீரோடையில் குளித்து வந்தனர். இதனிடையே தண்ணீர் வருவது குறைந்ததால் கோவை குற்றாலம் மீண்டும் இன்று திறக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.
இதனையடுத்து இன்று நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காலை 10 மணி முதல் 11 மணி வரையும், 11.30 மணி முதல் 12.30 மணி வரையும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை என்ற கால அட்டவணையின் அடிப்படையில் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
Leave a Reply