தெற்கு டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் பிரபலமான லெமன் கிரீன் என்ற ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இதில் காலை 9 மணி அளவில் பயங்கர தீ ஏற்பட்டது.தகவல் அறிந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீயில் சிக்கியிருந்த 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், 21 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் என கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும், அங்கு 6 அறைகள் கட்டவே அனுமதி அளிக்கப்பட்டதாகவும், அதனை மீறி 25 அறைகள் கட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே இந்த ஓட்டலுக்கு உரிய உரிமம் பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தன் எக்ஸ் தளப்பதிவில் பிரதமர் மோடி, “டெல்லி, மால்வியா நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் துயரமானவை. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.









